சுதந்திரத்திற்கு பிந்தைய தேர்தல்முறை

மதராஸ் கிராம ஊராட்சிகள் சட்டம் 1950 நிறைவேற்றப்பட்டது சுதந்திரத்திற்கு பிந்தைய கால தொடக்கத்தில் காணப்பட்ட குறிப்பிடத்தக்க நிலையாகும். இந்த சட்டம் அரசியலமைப்பின் 40-வது பிரிவை செயல்படுத்தும் வகையில் இயற்றப்பட்டதாகும்.

சுதந்திர இயக்கத்தினூடேயே தேசத்தந்தை மகாத்மாகாந்தி அவர்கள் கிராம மக்கள் "சுயராஜ்"யத்தின் உண்மையான தன்மையைப் பெறும் வகையில் பஞ்சாயத்துராஜ் அமைப்புகள் போதிய அதிகாரங்களுடன் உயிர்ப்பிக்கப்பட வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்தி வந்தார். காந்திஜியின் இந்த வலியுறுத்தலால் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் 40-வது பிரிவு (கிராம ஊராட்சிகளின் அமைப்பு) அறிமுகப்படுத்தப்பட்டது.

அது கீழ்க்கண்டவாறு படிக்கப்படுகிறது:-

"தன்னாட்சியின் அங்கங்களாக செயல்படும்வகையில் உரிய அதிகாரங்களோடு அமைப்பையும் கொண்ட கிராம பஞ்சாயத்துகளை ஏற்படுத்த அரசு நடவடிக்கைகள் எடுக்கவேண்டும்".

500 மற்றும் அதற்கு மேல் மக்கள் தொகை கொண்ட ஒவ்வொரு கிராமம் அல்லது குக்கிராமத்தில் கிராம பஞ்சாயத்துகளை அமைக்க மதராஸ் கிராம பஞ்சாயத்துகள் சட்டம் - 1950-ல் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

கட்டாய அடிப்படை தேவை சார்ந்த சில பணிகளும் பல விருப்புரிமைப் பணிகளும் கிராம பஞ்சாயத்துகளிடம் ஒப்படைக்கப்பட்டன. ஆனால், எல்லா கிராமங்களும் இப்பஞ்சாயத்துகளில் அடங்கவில்லை.

இதனைத் தொடர்ந்து, நாடு தழுவியதொரு சமூக வளர்ச்சித் திட்டம் தொடங்கப்பட்டபோது உள்ளூர் சமுதாயங்களை வளர்ச்சிப் பாதையில் ஈடுபடுத்தும் வகையில் ஒரு திறமிகு அமைப்பு சார்ந்த நடைமுறையின் தேவை உணரப்பட்டது. 50-களின் பிந்தைய காலத்தில் ஏற்படுத்தப்பட்ட சமூக வளர்ச்சித் திட்டம் மற்றும் பஞ்சாயத்து ராஜ்கான ஆய்வுக்குழு (பல்வந்த்ராய் மேத்தா கமிட்டி என அனைவராலும் அறியப்பட்டது) மூன்றடுக்கு பஞ்சாயத்து ராஜ் அமைப்பை நிறுவ பரிந்துரை செய்தது. மத்திய அடுக்கான பஞ்சாயத் சமிதி (தமிழ்நாட்டைப் பொறுத்தவரை ஊராட்சி ஒன்றியம்) அதிகாரப் பரவலின் ஒரு முக்கிய நிலையாக அமைந்தது. ஊராட்சி ஒன்றியத்தின் அதிகார எல்லையானது சமூக வளர்ச்சி வட்டாரத்தின் எல்லையை ஒத்ததாக இருந்தது. மாவட்ட அளவில் இன்றியமையாத ஒரு ஆலோசனை அமைப்பாக ஜில்லா பரிக்ஷத் விளங்கியது. கிராம ஊராட்சியானது மூன்றடுக்கு அமைப்பில் அடிமட்ட நிலையில் அமையும்.

பல்வந்த்ராம் மேத்தா குழுவின் அறிக்கையினைத் தொடர்ந்து உடனடியாக தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம், 1958 இயற்றப்பட்டது. இச்சட்டம், தமிழ்நாட்டின் அனைத்து பகுதிகளிலும் கிராம ஊராட்சிகள் அமைய வழிவகுத்தது. சுமார் 12,600 கிராம ஊராட்சிகள் தோற்றுவிக்கப்பட்டன. நகரச் சாயலைக் கொண்ட கிராமங்கள் பேரூராட்சிகளாக வகைப்படுத்தப்பட்டன. ஓர் ஊராட்சி ஒன்றியத்தை ஏற்படுத்தும் வகையில் ஒரு சமுதாய வளர்ச்சி வட்டாரத்தில் உள்ளடங்கிய அனைத்து கிராம ஊராட்சிகளும், பேரூராட்சிகளும் இணைக்கப்பட்டு தொடக்கமாக 385 ஊராட்சி ஒன்றியங்கள் உருவாக்கப்பட்டன.

தமிழ்நாட்டில் மாவட்ட அளவில் மூன்றாவது அடுக்கு கொண்டு வரப்படவில்லை. மாறாக, தமிழ்நாடு மாவட்ட வளர்ச்சிக் குழுக்கள் சட்டம் 1958-ன்கீழ் ஒவ்வொரு வளர்ச்சி மாவட்டத்திலும் ஒரு மாவட்ட வளர்ச்சிக் குழு ஏற்படுத்தப்பட்டது. வளர்ச்சி நிர்வாகத்திற்கென பெரிய வருவாய் மாவட்டங்கள் இரண்டு வளர்ச்சி மாவட்டங்களாக உருவாக்கப்பட்டன. இந்த மாவட்ட வளர்ச்சிக் குழுக்கள் மாவட்டத்தின் சட்டபூர்வ மற்றும் வளர்ச்சிப் பணிகளை ஆய்வு செய்து அறிவுரை வழங்கவேண்டும். அதன் பின் முன்பிருந்த மாவட்ட மன்றங்கள் செயல்படவில்லை.

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 73-வது திருத்தத்தினை தொடர்ந்து இயற்றப்பட்ட தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம், 1994-ன்கீழ் கிராம ஊராட்சி, ஊராட்சி ஒன்றியம் மற்றும் மாவட்ட ஊராட்சி என்ற மூன்றடுக்கு பஞ்சாயத்து ராஜ் முறையை நிர்ணயித்துள்ளது.

*****